ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்

மருத்துவர்களுடனான கலந்தாய்வில் கலந்து கொண்ட கலெக்டர் ரமண சரஸ்வதி.
அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையத்தினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ளனர் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 21.05.2022 முதல் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ முகாமில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் 0 முதல் 5 வயது குழந்தைகளை அரியலூர் அரசு மருத்துவமனையிலுள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையத்திற்கு அந்தந்த வட்டாரங்களிலுள்ள மேற்பார்வையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையத்தினை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட கைபேசி செயலியின் மாதிரி செயல்பாட்டினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை அளக்கப்பட்டது, வயதிற்கேற்ற உயரம், வயதிற்கேற்ற எடை, உயரத்திற்கேற்ற எடை குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து மூன்று வகையான சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையின் மூலம் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 37 இலட்சம் குழந்தைகளில் 2.50 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் இத்தகைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவு மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதே போன்று வீட்டில் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு சத்தான உணவுகள் வழங்குவதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டும். குழந்தைகளுக்கு காய்கறிகள், பால், பருப்பு, கீரைகள், நெய் உள்ளிட்ட சத்தான உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். இது குறித்து பெற்றோர்கள் தங்களது உறவினர்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவினை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமாகும்.
எனவே, பிறந்த குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் வழங்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி பேசினார்.
பின்னர், அரியலூர் மவாட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி, அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, திட்டத்தை திறம்பட மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், களப்பணியில் ஏற்படும் இடற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மரு.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu