விவசாயிகள் நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய ஆலோசனை
பைல் படம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்:அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 3000 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா வட்டாரங்களான திருமானூர், தா.பழூர் மற்றும் செயங்கொண்டம் வட்டாரங்களில் 1950 எக்டரும் இதர வட்டாரங்களான அரியலூர், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாரங்களில் 1050 எக்டரும் சாகுபடி செய்யப்படுகிறது.
இம்மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுவதும் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்யலாம். விதை விதைக்கும் கருவி கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்யவதால் நாற்றங்கால் தயாரி;ப்பு செலவு, விதை செலவு, நாற்று பறிப்பு, எடுத்துச்செல்லுதல், நடவு செலவு ஆகிய முறைகள் இல்லாததால் 1 ஏக்கருக்கு ரூ.5000 வரை செலவு மிச்சமாகும். எளிதில் விதைப்பு செய்யலாம். முக்கியமாக பயிர் அறுவடை முதல் 10 நாட்கள் முன்னதாகவே வந்துவிடும்.
விதைப்பதற்கு முன்னர் வயலினை நன்கு உழுது சமன்படுத்தி களை இல்லாமல் அரை இன்ச் அளவிற்கு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நேரடி நெல் விதைப்பிற்கு விதைக்கும் கருவி மூலம் விதைக்க ஏக்கருக்கு 12 கிலோ விதை போதுமானது ஆகும்.
இயந்திர நடவு செய்வதன் மூலம் ஏக்கருக்கு 12 முதல் 15 கிலோ விதை போதுமானது. 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகளை இயந்திர நடவுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 30-40 சதவீதம் வரை நீரை மிச்சப்படுத்தலாம். இயந்திர நடவு பின்பற்றுவதால் நாள் ஒன்றுக்கு 5 ஏக்கர் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு ரூபாய் 4000 முதல் 4500 வரை செலவாகும். 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகளை இயந்திர நடவுக்கு பயன்படுத்தலாம்.
திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றுவதால் ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல் போதுமானது. 1 சென்ட் நாற்றாங்கால் மூலம் 1 ஏக்கர் நடவு செய்யலாம். 14-15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை 1 முதல் 2 நாற்றுகளை 25ஒ25 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குள் பழுதான நாற்று மற்றும் விடுபட்ட பகுதிகளில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் அம்பை-16 மற்றும் ஆடுதுறை-45, கோ-51 ஆகிய இரகங்கள் 18 டன் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் 80 டன் இருப்பு உள்ளது. உரங்கள் யூரியா 796 டன், டிஏபி 5158 டன், பொட்டாஷ் 515 டன், காம்ப்ளக்ஸ் 2292 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நெல் நுண் சத்து 14 டன், திரவ உயிர் உரங்கள் 900 லிட்டர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மண்வளத்தை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உர விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் குறுவை செலவினங்களை குறைக்கும் வகையில் சமுதாய நெல் நாற்றங்கால் விடுதல்;, இயந்திர நடவு மற்றும திருந்;திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படுவதுடன் நீர் தேவையும் பெருமளவு குறைகிறது. நாற்றுகளை சூடோமோனாஸ் உயிரியல் காரணி லிட்டருக்கு 10 கிராம் வீதம் கலந்த நீரில் நனைத்து நடுவதன் மூலம் பயிர்களை நோய் தாக்குதலிலிருந்து காக்கிறது. நடவின் போது நெல் நுண்சத்து ஏக்கருக்கு 5 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலம் பேரூட்ட சத்துக்கள் சரியான விகித்தில் பயிர்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன் வாளிப்பான தூர்கள் அதிகளவில் வெடித்து கூடுதல் மகசூல் பெறலாம்.
தற்போதைய சூழ்நிலையில் குழாய் கிணறு மற்றும் வடிமுனை கிணறு உள்ள விவசாயிகள் உடன் நாற்றுவிட்டு நடவுப்பணியினை துவங்கவும், நடவுக்கு நாற்றாங்கால் தயார் நிலையில் உள்ள விவசாயிகள், உடன் நடவு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu