அரியலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க கடன் வசதி

அரியலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க கடன் வசதி
X
அரியலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, தொழில் முனைவோர்க்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற அடிப்படை கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு, பட்டய படிப்பு, தொழிற்கல்வி முடித்தவர்களும் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 35 வரையுள்ள பொது பிரிவினரும், குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 45 வரையுள்ள சிறப்பு பிரிவினரும் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், தாழ்த்தப்பட்டார், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவிகிதம் மானியத்துடன் ரூ.10 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5.00 கோடி வரையிலும் கடன் பெற பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற தளர்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 25 சதவீத மானியத் தொகையின் அதிகப்பட்ச தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் 25 சதவீத மானியத் தொகையில், கூடுதலாக 10 சதவீதம் மானியம் (25% + 2.5%) வழங்கப்படும். பங்குதாரர் நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், பெரும்பான்மையான பங்குதாரர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சார்ந்து இருந்தால் மட்டுமே இந்த கூடுதல் மானியம் வழங்கப்படும். இந்த ஆணையானது 02.09.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தில் சுற்றுப்புற சூழலுக்கு இயைந்த அனைத்து இலாபகரமான உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு கடன் வசதி செய்துதரப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://msmeonline.tn.gov.in/needs/index.phpஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555, 8925533925, 8925533926 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!