அரியலூர்:டெங்குவை கட்டுப்படுத்த கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க உதவிடுமாறும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான விபரங்களை, தங்கள் வீடுகளுக்கு ஆய்வுக்கு வரும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிர்ணயம் செய்யப்படும் இடங்களில், மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தினசரி நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், தற்போது வடகிழக்கு பருவமழைகாலம் என்பதனால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், குப்பைகளை உரிய முறையில் அகற்றிடுமாறும் மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கோள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்