அவசர தேவைகளுக்காக 24மணி நேரமும் இயங்கும்கட்டுப்பாட்டுஅறை...
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்பான அவசர தேவைகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்ததாவது,தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்பட்டுத்தும் வகையில் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்காக உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அவசர உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காகவும், கொரோனா நோய் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்காகவும் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கட்டுப்பாட்டு அறை மூலமாக நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் விநியோகம் குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் மருந்துபொருட்கள் விபரங்கள் குறித்தும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் இருப்பு மற்றும் தேவைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக கண்காணிப்பு அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துபொருட்கள் குறித்தான அறிக்கை பெற்று சமர்ப்பிப்பதற்காக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), கொரோனா தடுப்பு மருந்து இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த விபரங்களுக்காக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கொரோனா பராமரிப்பு மையத்தில் உள்ள நோயாளிகளை மருத்துவ பரிசோதனை செய்த விபரங்களை வட்டார மருத்துவ அலுவலர்களிடமிருந்து பெறுவதற்காகவும், நோயாளிகளின் உணவு மற்றும் சுகாதார தேவைகள் குறித்த விபரங்களுக்காக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) , ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் வெளிநபர்கள் யாரும் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் ஆய்வாளர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு கண்காணிப்பு அலுவலர்களுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக ஒருங்கிணைந்து செயல்படவுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இக்கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்கள், அவசர உதவி, மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு நிலவரம் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களுக்கும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற எண்ணிலும், 04329-228709 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும், பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu