அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
முன்கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

கொரோனா கால ஊக்கத்தொகையாக மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். அதனைப் போன்று முன்கள பணியாளர்களாக அன்றாடம் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று குப்பைகளை அள்ளுகின்ற, பொது சுகாதாரத்தை பாதுகாத்திடும் துப்புரவு பணியாளர் களுக்கும் கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரி துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பாக இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூரில் ,நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் நகராட்சி சங்கத்தின் செயலாளர் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவரும், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை ஏஐடியுசி பணியாளர் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினருமான டி. தண்டபாணி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

கொரோனா கால 3 மாத ஊக்கத்தொகை துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அன்றாடம் பணிக்கு வருகின்ற பொழுது உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய பல்ஸ் ,ஆக்சி மீட்டர் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் பரிசோதனை செய்து தான் பணிக்கு அனுப்பப்பட வேண்டும். கொரோனாகாலத்தில் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆகும் மருத்துவ சிகிச்சை செலவு தொகை முழுமையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளி பாகுபாடின்றி அனைவருக்கும் ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். தரமான கையுறை, முக கவசம், சோப்பு ,கபசுர பொடி இதுபோன்ற பாதுகாப்பு பொருள்கள் எதுவும் அரியலூர் நகராட்சி நிர்வாகம் கொடுப்பதில்லை, எனவே பாதுகாப்பு பொருள்களெல்லாம் அன்றாடம் கொடுக்கப்படவேண்டும்.

மேலும் குறைந்த கூலியில் துப்புரவு பணி செய்துவரும் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்ட தினக்கூலிக்கான சம்பளத்தை கடந்த 25 மாதங்களாக அமுலாக்காமல் அரியலூர் நகராட்சி நிர்வாகம் துப்புரவு தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. இப்போக்கு கைவிடப்பட்டு உடனடியாக தொழிலாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த சம்பளத்தை அரியருடன் அமுலாக்க வேண்டும்ஆகிய கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!