அரியலூர்: வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர்: வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தற்செயல் உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு செய்யப்பட்ட வாக்குப்பொட்டிகளை அந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (11.10.2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் அறையில் வீடியோ பதிவுகள் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டு, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்குபெறவுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கென தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு, அவர்கள் சென்று வர அமைக்கப்பட்டுள்ள இரும்பு வலைகள் மூலம் பாதைகள், வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையில் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை கூடுதல் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளதையும் மேலும், வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கு பெறவுள்ள முகவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தர அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், ஆண்டிமடம் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story