அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் 2ம் முறையாக ஒத்திவைப்பு

அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் 2ம் முறையாக ஒத்திவைப்பு
X

அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலுக்கு தயாராக இருந்த அதிகாரிகள் 

அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலுக்கு போதிய கவுன்சிலர்கள் கோரம் இல்லாததால், இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

அரியலூர் நகராட்சியில் கடந்த 4ம்தேதி காலை நடைபெற்ற நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சாந்திகலைவாணன் 10வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜீவாசெந்தில் 8 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மதியம் 2.30மணிக்கு நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என நகராட்சி ஆணையர் சித்ராசோனியா அறிவித்திருந்தார். திமுக கவுன்சிலர்கள் 7பேரும், சுயேட்சை கவுன்சிலர்கள் மூன்றுபேரும் சேர்த்து 10பேரும் கூட்டஅரங்கிற்கு வருகை தரவில்லை. மதியம் 3மணிவரை 10பேர் கூட்டஅரங்கிற்கு வருகை தராததால், தேர்தலுக்கு தேவையான உறுப்பினர்கள் கோரம் இல்லை என்பதால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக நகராட்சி ஆணையர் சித்ராசோனியா அறிவித்தார்.

அதிமுகவை சேர்ந்த 4வது வார்டு கவுன்சிலர் கண்ணன் திமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 11ஆக உயர்ந்தது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் 26ம்தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி இன்று மதியம் 3மணிக்கு அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ராசோனியா இதற்கான ஏற்பாடுகளை செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) ஆறுமுகம், தேர்தல் பார்வையாளராக திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டஅரங்கிற்கு 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். இந்த முறையும் திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் உள்பட 11 பேர் கூட்டத்திற்கு வருகை தராததால், போதிய கவுன்சிலர்கள் கோரம் இல்லாததால், துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம் அறிவித்தார்.

2ம்முறையாக அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி