அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று வெளியிட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (01.11.2021) வெளியிட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்திலுள்ள 149. அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150.ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 01.11.2021 வெளியிடப்படுகிறது.
149. அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 130872 ஆண் வாக்காளர்களும், 132554 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் மொத்தம் 263433 வாக்காளர்கள் உள்ளனர். 150.ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 130380 ஆண் வாக்காளர்களும், 133742 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் மொத்தம் 264125 வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்கள் 527558 உள்ளனர்.
மேலும், 01.01.2022 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களைஅந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 01.11.2021 முதல் 30.11.2021 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம்-6, 6யு, 7, 8 மற்றும் 8யு) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை), 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu