விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்த அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடு பொருட்களை உழவன் செயலில் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த உதவிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலியினை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். முன்பதிவு செய்வதினால் வழங்கப்படும் இடுபொருள்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உழவன் செயலியை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தினால் இடு பொருட்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு தாமதமின்றி கிடைக்கும் என்பதற்காகவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu