அரியலூர்: தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டத்தை கலெக்டர் அறிவிப்பு

பைல் படம்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-23 ஆம் ஆண்டிற்கு இரண்டு கூறுகளுடன் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணத் திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.
மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டமானது, கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோரை மீண்டும் தொழில்களை நிறுவிட அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
2020-21-ல் தொற்றுநோயினால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தொழில்நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன் மூலம் பயன் பெறலாம்.
அதிகபட்ச திட்டச் செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும். மானியத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை.
நவீன மயமாக்கலுக்கான ஊக்கத் திட்டமானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கானது. இத்திட்டத்தில், தொழில்நுட்ப மேம்படுத்தல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுநோயால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதி வாய்ந்தவை.
மூலதன மானியமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும். இத்திட்டம் 2022-23 ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில், மேற்கண்ட பிரிவின் கீழ் உள்ள பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் அவர்களை நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu