கீழப்பழுவூரில் 576 அடுக்குமாடி குடியிருப்பு: காணொலி மூலம் முதல்வர் திறப்பு
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 576 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் நேரலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு புதிய வீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்கள். இத்திட்டத்தின்கீழ் கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 576 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. குடியிருப்புகளில் ஒவ்வொரு குடியிருப்பும் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடியிருப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, ஆழ்துளாய் கிணறுகள், 3 கீழ்நிலை தண்ணீர் தொட்டிகளுடன், கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட பகுதியில் மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக், நடைபாதை ஆகிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள் வீடற்ற, அரியலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் தளஆய்வு செய்து, 576 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர் அ.சுமதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் டி.இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் இ.அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu