அரியலூர் மாவட்டத்தில் 34,800 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தனர்.
தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக 6,08,213 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 4,09,195 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் இன்று முதல் பதினைந்தில் இருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளிகள் 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுகாதாரத்துறையில் சிறப்பு முகாம்கள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக இன்று 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 23 பள்ளிகளில் 4545 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகின்றன.
மேலும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர் மேலும் அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவில் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.
எனவே மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி பணியினை செயல்படுத்திட சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நமது அரியலூர் மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ஐ தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, நகராட்சி ஆணையர் சித்ரசோனியா, வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu