ஊட்டி, கொடைக்கானல் போக போறீங்களா? முதலில் இ பாஸ் வாங்குங்க பாஸ்...

ஊட்டி, கொடைக்கானல் போக போறீங்களா? முதலில் இ பாஸ் வாங்குங்க பாஸ்...
X

ஊட்டி மற்றும் சென்னை ஐகோர்ட் (கோப்பு படங்கள்)

ஊட்டி, கொடைக்கானல் போக நினைப்பவர்கள் முதலில் இ பாஸ் வாங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆஜராகி இருந்தனர். அப்போது ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களில் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஊட்டிக்கு தினமும் 1300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும் எனவும் உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இபாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இபாஸ் உரிமம் பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும் இ பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டிய நிலமும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசுக்கு மேல் கொளுத்தி வரும் நிலையில் வசதி படைத்தவர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க கார் ,வேன்களை எடுத்துக்கொண்டு ஊட்டி ,கொடைக்கானலை நோக்கி பறந்து விடுகிறார்கள். இனி அவர்கள் நினைத்தவுடன் போய்விட முடியாது. முறைப்படி இ பாஸ் வாங்கி கொண்டு தான் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story