காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த செப்டம்பர் மாதத்திற்குப்பின் 3 தற்கொலைகள் ஐஐடி வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த தற்கொலைக்கான காரணங்களை ஐஐடி இயக்குநரே 4 காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார். எந்த காரணமாக இருந்தாலும் தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. விலைமதிப்பற்ற உயிரிழப்பை எந்த நிர்வாகமும் ஏற்றுக்கொள்வதுமில்லை அனுமதிப்பதுமில்லை.
ஒரு தந்தையின் மனநிலையிலிருந்து நேற்றைக்கு நடைபெற்ற உயிரிழப்பு சம்பந்தமாக ஐஐடி இயக்குநர் மிகவும் வருத்தப்பட்டார். இப்பொழுதும் கூட கேட்டுள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிற மனம் திட்டத்தை நாங்கள் ஐஐடி வளாகத்திலும் செயல்படுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார். மாணவர்களிடையே எத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்துவது; அவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை போக்குவது எப்படி; அவர்களுக்கு இடையே இருக்கிற தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி; அவர்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சனைகளுக்கும் என்ன மாதிரியான தீர்வு என இவற்றையெல்லாம் கூடி பேசி தனித்தனியே தீர்க்க முயற்சிப்போம் எனக் கூறியிருக்கிறார்.
எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கக்கூடாது. மாணவர்களுக்கு அரசின் சார்பிலும், ஐஐடி நிர்வாகத்தின் சார்பிலும் விடுகின்ற வேண்டுகோள் தற்கொலை என்பது தீர்வு அல்ல. உயிர் விலைமதிப்பற்றது. பிறந்து விட்டதற்குப் பிறகு வாழ்ந்து தான் தீர வேண்டும். எப்படி வாழ வேண்டும் என்பது நமது கையில் தான் உள்ளது. எனவே மாணவர்களாக இருந்தாலும், எந்த தரப்பு வயதினராக இருந்தாலும் தற்கொலை என்பது 100 சதவீதம் தவிர்க்கப்பட வேண்டிய ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல் என்றார்.
மேலும் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்னால் ஆயிரம் இடங்கள் என்று அறிவித்தோம். தினம் தோறும் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் 476 வாகனங்கள் இருக்கிறது. எங்காவது ஒரு கிராமத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் அந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் போய் ஸ்கிரீன் செய்கிறார்கள். பெரிய அளவில் இதனை பதற்றப்படுத்தி இக்கட்டான சூழ்நிலை உருவாக்க வேண்டாம் என கூறினார்.
இதனையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசும் அதுபோல் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கான அவசியம் இல்லை. அந்த அளவிற்கு சீரியஸ்னஸ் இல்லை. தேவையில்லாமல் பெரிய பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu