அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: கட்டுக்கட்டாய் சிக்கியது பணம்
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்குவதை தடுக்க அதிரடி சோதனை மேற்கொள்ளப்படது.
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வணிகவரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத்துறை, வேளாண்மைத்துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய 16 துறை சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய். 1,12,57,803/- மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
கோவை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, செங்கல்பட்டு, நாமக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்றது. செங்கல்பட்டு பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் சிக்கியது. திருவாரூர், தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அங்குள்ள அனைத்து அறைகளையும் முழுமையாக சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து கோட்ட என்ஜினீயர் இளம்வழுதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்.
நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் மற்றும் உதவி கோட்ட என்ஜினீயர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் சிக்கியது.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 290-ஐ பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.25 லட்சமும், தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.25¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.14 ஆயிரமும், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.
இதில் 27 அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.1.12 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu