வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு
பைல் படம்.
வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு அறிவித்து, விவசாயிகள் முன்பதிவு செய்ய அழைப்பு தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பலவகையான விருதுகளை அறிவித்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.
வேளாண்மை - நிதிநிலை அறிக்கை அறிவிப்பு:-
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் "வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.2 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்க தகுதிகள்:-
இப்பரிசினை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வயது வரம்பு ஏதுவுமில்லை. விண்ணப்பதாரர்கள் உழவன் செயலி மூலம் குறிப்பிட்ட படிவத்தில் ரூ.100/- பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க என்னென்ன விபரங்கள் தேவை?
விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண், தந்தையின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும். விவசாயிகள் ஏற்றுமதி செய்த விளை பொருளின் பெயர், ஏற்றுமதி செய்யப்பட்ட விளை பொருளின் அளவு, ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள், பயிர் விளைவிக்க மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்ட விவரம் ஆகியவை விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். மேலும், விண்ணப்பத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான இரசீது எண்ணும் தேதியும் குறிப்பிடப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான குழு:
விண்ணப்பதாரர்கள் தனது சாதனையை சரியான விளக்கத்துடன், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான, மாவட்ட அளவிலான குழுவிடம் விளக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழு, பெறப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட விபரங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளில் தகுதியானவர்களின் விவரங்களை, தங்களது பரிந்துரைகளுடன் மாநில அளவிலான குழுவிற்கு அனுப்புவார்கள்.
மாநில அளவிலான குழு:-
மாவட்ட அளவிலான குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளில், மிகச் சிறந்த ஒருவரை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் தலைமையிலான மாநில அளவிலான குழு, வேளாண் ஏற்றுமதி விபரங்களின் அடிப்படையில் தேர்வு செய்து பரிசுத்தொகையினை வழங்கும்.
எனவே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், வேளாண் ஏற்றுமதியில், உங்களைப் போன்றே மற்ற விவசாயிகளுக்கும் ஆர்வம் அதிகம் ஏற்படும் என்பதால், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu