அனிமேஷன் தொழில்நுட்பம்: உலகத்தரத்திலான கல்வி நிறுவனம் விரைவில் ஏற்படுத்தப்படும் - எல்.முருகன்
திரைப்படத்துறையில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளுடனான கூட்டத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது என்பது பற்றிய விபரங்கள் அடங்கிய இணையதளம் அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த புதிய இணையதளம், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இந்தியாவின் எந்த பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கு வகைசெய்வதோடு, தொழில்புரிவதை எளிதாக்குவதை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனிமேஷன் கல்வி விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயில, உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பட வர்த்தக சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, திரைப்படத் தொழிலுக்கான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்த மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தனர். கோவிட் பாதிப்பு காரணமாக திரைப்படத்தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பிராணிகள் நல வாரிய சான்றிதழ் பெறுவது, தனியுரிமை பிரச்சனைகள், படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச்சாளர அனுமதி, திரைப்படங்கள் மீதான இரட்டை விரிவிதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண்டல திரைப்படத் தனிக்கை அலுவலகங்களில் பிராணிகள் நல வாரியத்தின் பிரிவு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரைப்பட தனிக்கை வாரியத்தில், திரைப்படத் தொழில் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் இடம்பெறச் செய்வதோடு, திரைப்பட தனிக்கை மேல்முறையீட்டு மன்றத்தை அமைப்பதுடன், பிலிம் பேர் விருதுபெற்ற திரைப்படங்களை தூர்தர்ஷனில் ஒலிபரப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் அமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திரைப்படத்துறையினரின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். தென்னிந்திய திரைப்படத் தொழில் துறையினரின் மெக்காவாக கருதப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு உட்பட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்களை சந்தித்தது பெருமையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, கருத்துக்களை பரிமாறுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu