நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்

அமைச்சர் ரோஜா (பைல் படம்)
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டி.ராமராவின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டி.ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ராமாராவ் குடும்பத்தினர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு அவர் ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர் என பேசினார். மேலும் அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை காரணமாக ஹைதராபாத் நகரம் நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது என்று கூறினார்.
ஆந்திர மாநிலம் பாபட்டலாவில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
2003 வது ஆண்டுடன் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதன்பின் தற்போது இருபது ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும் என ரோஜா தெரிவித்தார்.
மேலும் நேற்றைய உரையில் விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார் . என்டி ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும்.
தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி என்டி ராமராவ் பேசியவை குறித்து ரஜினிகாந்த்திற்க்கு தெரியவில்லை என்றால் என்டி ராமராவ் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதைக் கேட்டு என்டி ராமராவ் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரோஜா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu