ஆன்லைன் சூதாட்ட மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல்
X

அன்புமணி ராமதாஸ்.

ஆன்லைன் சூதாட்ட மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டை மீண்டும் தங்களின் வேட்டைக்காடாக்கின. கோடிக்கணக்கில் பரிசு வழங்குவதாகவும், புதிதாக விளையாட வருவோருக்கு போனஸ் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் காட்டி, சூதாட்டம் ஆட வருமாறு தமிழக மக்களை அழைத்தன. அப்போதே இது குறித்து எச்சரித்த நான், ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகத் தான் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட இரு மாதங்களில் ஓர் ஆசிரியர் ரூ.8 லட்சத்தை இழந்திருக்கிறார் என்றால், ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு ஆக்டபஸ் போன்று வளைத்திருக்கிறது என்பதை உணர முடியும். ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படவில்லை என்றால், சரவணனைப் போன்று நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். அதை தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா