சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு: அன்புமணி

சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு: அன்புமணி
X

பைல் படம்

சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதற்கு, சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோதி சேதப்படுத்தியுள்ளது சிங்களக் கடற்படை. இத்தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

கடந்த 7-ஆம் தேதி தான் இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்வர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் மேலும் 25 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால் எந்த பயனும் ஏற்படாது.

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!