திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிகளுக்கு வரப்போகிறது அமெரிக்க கல்வி முறை
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். அதனையே அகில இந்திய அளவிலும் பிரபலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், உலக தரத்திலான கல்வியை பள்ளி நிலையிலேயே மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நவீன தகவல் தொழில் நுட்பங்கள் நிறைந்த அமெரிக்க மாடல் கல்வி முறையை அமல்படுத்துவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தைப் பார்வையிடல். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கேற்பு மூலம் தமிழ்நாட்டுப் பள்ளிக்குழந்தைகளின் திறன் மேம்பட்டு உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுதல்,ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றல்ஆகியவற்றைப் பயிலும் வாய்ப்பைப் பள்ளி அளவில் ஏற்படுத்துதல் ஆகியவை அமைச்சரது பயண திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அன்பான அழைப்பை ஏற்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது குழுவினருடன் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களைப் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றலுக்குத் துணைநிற்றல் (TEALS) திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைச்சர் தலைமையிலான குழுவினரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் சிசில் சுந்தர், பொதுமேலாளர்(சேவைகள்) ஜெய் நடராஜன், TEALS திட்டத்தின் தலைவர் பீட்டர் ஜூபே. நிறுவனத்தின் களத் தலைமை ஆண்ட்ரியா ரூசோ ஆகியோர் வரவேற்றனர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கு புகழ்பெற்ற பாஸ்டன் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ் & லத்தீன் பப்ளிக் பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டு அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் ரோபோட்டிக் கலை, செயற்கை நுண்ணறிவு, கணினி எழுத்தறிவு கலைத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மைக்ரோசாஃப்ட் குழுவினர் மற்றும் தொழில்நுட்பத் தொழிலகங்களின் பிரதிநிதிகள், மைக்ரோசாஃப்ட் TEALS திட்டத்தின் வாயிலான தொழில் நுட்பக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக் கல்விக்குத் தயார்செய்தல் ஆகியன குறித்து அமைச்சருக்கு விவரித்தனர்.
பள்ளிப் பார்வையிடலை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப மையத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களையும் பங்கேற்பு நிறுவனத்தினரையும் சந்தித்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான பாடத்திட்டம் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த விவாதம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு. இயந்திர வழிக் கற்றல் ஆகியவற்றில் நவீனப் பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய பாடத்திட்டம் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துடன் நிலைத்த ஆக்கப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இந்தக் கருத்துரு தனது துறையால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இதில் பயன்பெறும் மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்கிட முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கல்வி முறை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய, உலகளாவிய கல்வி மற்றும் திறன்கள் மூலமாக ஒவ்வொரு குழந்தையும் தம் கனவுகளை அடைய முடியும். திறன் பெறுவதன் வாயிலாக உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்நிலையை அடைய வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டம் கிராமப்புறக் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu