அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை
பைல் படம்.
அதிமுக என்ற அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக 28 ஆண்டுகளாகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 15 ஆண்டுகளாகவும் இருந்து, மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக திகழ்ந்த ஜெ.ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியில் இருந்த போதே 2016 ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார். அவர் விட்டு சென்ற ஆட்சி 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்தது. ஜெயலலிதாவின் மறைவையடுத்து, 2 மாதங்கள் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சராகவும் பதவி வகித்தனர். பிறகு நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகித்தார்.
தர்மயுத்தத்துக்கு பின் மீண்டும், அதிமுகவில் மீண்டும் இணைந்த ஓபிஎஸ், ஆட்சியில் துணை முதலமைச்சரானர். கட்சியின் விதிகளை திருத்தி, பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி அப்பதவியில் தொடர்ந்தார் ஓ.பி.எஸ் . இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் தேர்வானார். 2021 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார் இ.பி.எஸ். தேர்தல் தோல்விக்கு பின் தான் அதிமுக-வில் புகைச்சல் ஆரம்பமானது. ஆனாலும், சட்டசபை அதிமுக குழுத்தலைவராகவும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கம் போல் துணைத்தலைவர் பதவி ஓ.பி.எஸ் க்கு வழங்கப்பட்டது.
அதிமுகவை வழிநடத்துவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அதிக அளவில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் வென்றதாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் இயற்றியதாலும் அதிமுகவுக்குள் பெரும் விவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அதிமுக-வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு அணியினரும் பொதுக்குழு தொடங்கி, பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை நீதிமன்றம் சென்றதை கால வாரியாக பார்க்கலாம்…
2022 ஏப்ரல் 6 :
அதிமுக தலைமை அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆலோசனை. நிர்வாகிகளிடையே வாக்குவாதம். கட்சி பதவிகளில் இ.பி.எஸ் அணியினர் அதிக அளவில் இருந்ததால், ஒப்புதல் கடிதத்தில் ஓ.பி.எஸ் கையொப்பமிட மறுப்பு.
2022 ஜூன் 2 :
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ல் தற்காலிக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அறிவிப்பு
2022 ஜூன் 14:
ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பெரும்பாலானோர் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு.
2022 ஜூன் 16:
ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம், தனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிப்பதாகவும், 14 பேர் கொண்ட உயர்மட்ட குழுவின் முடிவுக்கு தலை வணங்குவேன் என்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு.
2022 ஜூன் 19:
பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் ஓபிஎஸ், இ.பி.எஸ் இருவரும் தங்களது இல்லங்களில் தனி தனியாக ஆலோசனை நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2022 ஜூன் 22:
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் வழங்கிய மனு நிராகரிப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும் 23 தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
2022 ஜூன் 23:
பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் வருகை, தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக நியமனம். பொதுக்குழுவில் இருந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். ஓ.பி.எஸ்சை எதிர்த்து கண்டன முழக்கம் மற்றும் ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீச்சு அரங்கேறியது.
2022 ஜூன் 24:
ஒருங்கிணைப்பாளரான தன் கையெழுத்தின்றி ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையீடு
2022 ஜூன் 28:
ஓ.பி.எஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் பதில் மனு தாக்கல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமைக்கு வற்புறுத்தியதால், ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார் என குற்றச்சாட்டு.
2022 ஜூலை 6:
அதிமுக பொதுக் குழு உட்கட்சி விவகாரம் தொடர்பாக தடை விதிக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2022 ஜூலை 7:
பொதுக் குழுவுக்கு தடையில்லை: கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது இ.பி.எஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 ஜூலை 11:
பொதுக்குழுவுக்கு தடையில்லை என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து பொதுக்குழு நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு. ஒருபுறம் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். இரு தரப்பினரிடையே மோதல். அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இபிஎஸ் சும், ஓபிஎஸ்சும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பு.
2022 ஜூலை 29:
பொதுக்குழு குறித்த மேல் முறையீட்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க பரிந்துரை.
2022 ஆகஸ்ட் 5:
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறித்து ஓ.பி.எஸ் அதிருப்தி. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம். நீதிபதியிடம் ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்துவும் மன்னிப்பு கேட்டனர். நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் ஆகஸ்ட் 10 , 11-ம் தேதிகளில் விசாரணை நடந்தது.
2022 ஆகஸ்ட் 17 :
ஜூலை 11-ம் தேதி, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2022 செப்டம்பர் 02:
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு. இந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது.
2022 செப்டம்பர் 06:
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கிடைத்த இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
2022 அக்டோபர் 01:
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதி அளித்தது.
2022 அக்டோபர் 10:
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு அவரது தலைமையில் மாவட்ட செயலாளர்கள் முதல் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
2023 ஜனவரி 10, 11:
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தங்களுடைய வாதங்களை நிறைவு செய்தன. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2023 ஜனவரி 18:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
2023 ஜனவரி 29:
ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடையீட்டு மனு
2023 பிப்ரவரி 01:
ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிப்பு.
2023 பிப்ரவரி 03:
அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி தேர்வு செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த இடையீட்டு மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
2023 பிப்ரவரி 06:
ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தேர்தலில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு.
2023 பிப்ரவரி 06:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு என பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் அதற்கான கடிதத்தை வழங்கினார்.
2023 பிப்ரவரி 06:
எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு. வேட்பாளரை தேர்வு செய்யப்படுவதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
2023 பிப்ரவரி 23:
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
2023 பிப்ரவரி 27 :
இதற்கிடையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இருந்தும் ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை தழுவியது.
2023 மார்ச் 19:
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து கடந்த 22-ம் தேதி நீதிபதி விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, இந்த வழக்குகளின் இடைக்கால கோரிக்கைகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
2023 மார்ச் 28:
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி செய்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
உயர்நீதிமனர் தீர்ப்பு சாதமாகமாக வந்ததை அடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவரிடம், பொதுச்செயலாளருக்கான் சான்றிதழை தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினர்.
இதன் பின்னர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu