அதிமுக பாஜக முரண்பாடு: ஒரு வழியாக சமாளித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். இந்நிலையில் வார்டு பங்கீடு பற்றி கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று அதிமுக உடன் பாஜக கூட்டணி குறித்து, பாஜக நிர்வாகிகள் கமலாலயத்தில் தனியாக ஆலோசனை நடத்தினர்.
அதே போல அதிமுக அலுவலகத்திலும் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜகவை கூட்டணியில் இணைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றி ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களை எதிர்பார்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவிகித இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பாஜகவுக்கு இடங்களை ஒதுக்கியது அதிமுக. அதன்படி 10% சதவிகிதம் இடங்களையே பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன.
சில நாட்களுக்கு முன் தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுகவிற்கு எதிராக சில கருத்துக்களை கூறினார், அதிமுகவினரை அதிகம் கோபமடைய வைத்தது. அதற்கு அதிமுகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். உடனடியாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை சமாதனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். பாஜக அதிமுக நட்பை தக்கவைக்க முயற்சி எடுத்து வருகிறார்.
இடப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது நயினார் நாகேந்திரன் கூட இருக்கக் கூடாது என்று அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரன், பாஜக சட்டசபை குழு தலைவராக இருந்தாலும், பாஜக தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து விட்டார் என கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டால், அது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதும் பாஜகவினர் அதிமுகவோடு கூட்டணியில் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். எங்களுடன் இருந்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம், இல்லாவிடில் அவர்களுக்குதான் நஷ்டம் என்று ஜெயக்குமார் கூறிவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கவுன்சிலர் தொகுதி வார்டு பங்கீடு தொடர்பாக அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரனை விட்டு விட்டு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்றனர்.
தற்போது சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu