அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனிசாமி.

aiadmk-bjp alliance: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று முதல் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

aiadmk-bjp alliance: சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை அதிமுகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஸ்டேக் உடன் பதிவிடப்பட்டுள்ளனர்.

மேலும் செய்தியாளர்களஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அதிமுக தலைமையகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், ஜெயலலிதா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story