இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
X

கோப்புப்படம் 

அக்னி நட்சத்திர சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இதை பேச்சு வழக்கில் கத்திரி வெயில் என்று சொல்வதுண்டு.

அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தை வந்ததற்கு இந்து மதத்தில் பல புராணங்கள் உள்ளது. புராண வரலாறுபடி 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் வைகாசி மாதம் 14 வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை ’அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வார்கள்.

இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை என 25 நாட்கள் அக்னி நட்சத்திர நாட்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் இருக்கும் அக்னி நட்சத்திர காலகட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்கிறார்கள்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். சித்திரை மாத பிற்பகுதி, வைகாசி முதல் பகுதி நாட்களை மக்கள் பின் ஏழு, முன்னேழு என கூறி கணக்கிடுவது வழக்கம்.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது .

இந்தாண்டு அக்னி நட்சத்திர காலத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மே 13 ம் தேதி வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்காது.

அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது, 100 சதவிகிதம் வானிலைத் துறையின் வார்த்தை கிடையாது. அது, பஞ்சாங்கத்தின் வார்த்தை. வானிலைத் துறையானது, ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும்தான். இது, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலைத் துறை கூறுவதில்லை

மே 8 ம்தேதி தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகரும். இது புயலாக மாறும் இப்புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இப்புயல் தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தை இழுக்கும் என்பதால் மே 13ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் வெப்பத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக உள்மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.

மே 13 ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெப்பநிலை உயர்ந்தாலும் தென் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் அளவுக்கு வெப்பநிலை உயராது. ஏனெனில் வங்க கடலில் உருவாகும் புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை தமிழகம் வழியாக இழுக்கும் என்பதால் கன்னியாகுமரி தென்காசி நெல்லை மாவட்டங்களில் இதமான சூழல் நிலவும்.

தென் மாவட்டங்களில் மேற்கு காற்று வீச தொடங்கும் என்பதால் கோடைகாலமே இல்லாத மாவட்டங்களாக திகழும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!