மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்- அமைச்சர் நிவாரணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். சீர்காழி தாலுகா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா கேசவன் பாளையம், சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள், புத்தாடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் 38 வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். மாவட்டத்தில் 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 7 வீடுகள் முழுமையாகவும் 246 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாக சேதமடைந்துள்ளது. வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால் வெள்ள நீர் வடிய வழியின்றி 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பயிர்கள் அழுகி விட்டதாக விவசாயிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் அமைச்சர்கள் பெரியசாமி, கே. என். நேரு, மெய்யநாதன் மற்றும் எம்.பி. ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் பாதிக்கப்பட்ட விவரங்களை முதல்வரிடம் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறிய முதல்வர் நாகை மாவட்டம் கருங்கண்ணி அருந்தவம்புலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu