கழிவுநீரிலிருந்து மாசுபாடுகளை அகற்ற ஏரோஜெல்: சென்னை ஐஐடி உருவாக்கம்

கழிவுநீரிலிருந்து மாசுபாடுகளை அகற்ற ஏரோஜெல்: சென்னை ஐஐடி உருவாக்கம்
X

பைல் படம்

கழிவுநீரிலிருந்து மாசுபாடுகளை அகற்ற ஏரோஜெல்: உறிஞ்சியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

ஐஐடி சென்னை மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம், இஸ்ரேல் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர்.

கிராஃபீன் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல், தொடர்ச்சியான ஓட்டநிலைகளில் 76 சதவீதத்துக்கும் மேலாக மாசுபாடுகளை (பிபிஎம் நிலை) நீக்கி பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புக்கு நிலையான வழிமுறையை அளிக்கிறது. இந்த முடிவுகளைக் கொண்டு பெரிய அளவில் மேம்படுத்த ஆராய்ச்சிக் குழுவினர் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் காற்றுடன் கலந்திருக்கும் மிகமிக இலகுரக திடப் பொருட்களாக ஏரோஜெல்கள் சிறந்த உறிஞ்சிகளாக (மாசுபாடுகளை அகற்றப் பயன்படுத்தும் திடப்பொருள்) செயல்படுகின்றன. அத்துடன், சரிசெய்யக்கூடிய மேற்பரப்பு வேதியியல், குறைந்த அடர்த்தி, அதிக நுண்துளை அமைப்பு போன்ற நன்மைகளும் அவற்றால் கிடைக்கப் பெறுகின்றன. இப் பொருட்கள் 'திடக் காற்று', 'உறைந்த புகை' என்றெல்லாம் எளிமையாக குறிப்பிடப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவிலான நீர்ஆதாரங்களில் வெறும் 4 சதவீத அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. எனவேதான் நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர் சார்ந்த தொழில்களான மருந்து மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைகளில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் டன் அளவுக்கு நச்சு செயற்கை சாயங்கள் வெளியேற்றப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்ற பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிக் குழுவில், ஐஐடி மெட்ராஸ் கெமிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான சுபாஷ் குமார் சர்மா, பி.ரஞ்சனி, டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினரின் கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க இதழான நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (https://doi.org/10.1038/s41598-023-43613-w)-ல் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது.

இதுபோன்ற ஆராய்ச்சியின் அவசியம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் கெமிக்கல் என்ஜினியரிங் துறைப் பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் கூறுகையில், "கழிவுநீர் சுத்திகரிப்புக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமின்றி, நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடைய சுகாதாரப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் அவசியமாகிவிட்டன" எனக் குறிப்பிட்டார்.

"வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு மாசுபாடுத் தடயங்களை அகற்ற முயல்வது அதிலும் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில் மிகக் கடினமாக இருந்து வருகிறது. இதனைச் சமாளிக்கும் வகையில், உறிஞ்சுதல், நவீன ஆக்சிஜனேற்ற முறை, சவ்வு வடிகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுற்றுச்சூழலுக்கு இயைந்த இயற்கை முறை, குறைந்த செலவு, மிகத் திறமையாக மாசுக்களை நீக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக 'உறிஞ்சுதல் முறை' விரும்பத்தக்கதாக உள்ளது" என்றார்.

இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஹடாஸ் மாமனே கூறும்போது, "எங்களது கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட GO-SA ஏரோஜெல்களின் மேற்பரப்பு வேதியியலை மாற்றியமைத்து, குறிப்பிட்ட மாசுக்களை சுத்திகரிக்கும் வகையில் தனிப்பயனாக்க முடியும். ஏரோஜெல்களை திரும்பவும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைந்துகொண்டே வருவதுடன், குடிநீரை சுத்திகரிக்க ஆகும் இயக்கச் செலவுகளும் வெகுவாகக் குறையும். நீர் சுத்திகரிப்புக்கு இது நிலையான தீர்வாகவும் அமைகிறது" என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!