அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு: பொதுச்செயலாளர் ஆவாரா ஈபிஎஸ்?
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலித்ததால் பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையே, பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இருந்தபோதிலும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதல்கட்டமாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும் முடிவை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், அதிமுக தொடர்பான வழக்கில் நாளை (28-03-23) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நீதிபதி குமரேஷ்பாபு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளார். ஏற்கெனவே, பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே அவர் முறைப்படி பொதுச்செயலாளர் என்ற பதவியை ஏற்றுக் கொள்ள முடியும்.
அதிமுக மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்திருக்கும் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.
வழக்கு விவரங்கள்:
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியில் இருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டு இருந்தார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது என்றும் வாதிடப்பட்டது.
தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி இருந்தார்.
பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது.
அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு, ஜூன் 23 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பினர், கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது.
ஓபிஎஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நீதிபதி குமரேஷ்பாபு நாளை (மார்ச் 28) தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu