ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த தமாகா.. ஜி.கே. வாசன் பரபரப்பு அறிக்கை...

ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த தமாகா.. ஜி.கே. வாசன் பரபரப்பு அறிக்கை...
X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது அந்தத் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் . இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி மனுத் தாக்கல் நிறைவடைகிறது. 8 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற 9 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்குப் பிறகு மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன . இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆன் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் வழக்கம்போத இந்த தேர்தலிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவும், அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜாவும் போட்டியிட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக போட்டி உறுதி:

ஆனால், அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனிடம் அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்பி காய்களை நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில், அதிமுக கேட்டுக் கொண்டதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தற்போது, அந்தத் தொகுதியில் அதிமுக போட்டியிட விரும்புவதாக மூத்த நிர்வாகிகள் என்னை சந்தித்து கேட்டுக் கொண்டனர். அவர்களது விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது என ஜிகே வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்