திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
X

எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்).

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக அரசைக் கண்டித்தும், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசு கடந்த 18 மாதங்களில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளது.

மேலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மின் கட்டணம் வரலாறு காணாத வகையில் நூதன முறையில் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் ஊடுருல், போதைப் பொருட்கள் புழக்கம், தி.மு.க. ரவுடிகளின் அராஜகங்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சி பகுதிகளிலும் அதிமுக சார்பில் டிசம்பர் 9 ஆம் தேதியும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் டிசம்பர் 13 ஆம் தேதியும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் டிசம்பர் 14 ஆம் தேதியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளான அளவில் கலந்துகொ ள்ள வேண்டும். மேலும், திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!