ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு...
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா மறைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அதிமுக சார்பில் தென்னரசும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவனும் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று உள்ளதும் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.
தொகுதியின் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்றும் அவர்கள் கள்ள ஓட்டு போட பயன்படுத்தக் கூடும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர், பணபட்டுவாடா பற்றி நிர்வாகிகளிடம் பேசி உள்ளார் எனவும், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 8 ஆயிரத்து 500 வாக்குகள் தான் எனவும், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீடிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால் மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல தேதிகளில் மனு அளித்திருந்ததாகவும் கூறி உள்ளார்.
இந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பூத் ஸ்லீப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu