ஈரோடு இடைத் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. (கோப்பு படம்).
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 27.2.2023 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னரசுக்கு, வாக்களித்த மக்கள் அனைவருக்கும், இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த திமுக, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கத் தொடங்கியது.
'திருமங்கலம் பார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப் போல், வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது ஆளும் திமுக.
அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, உணவு, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. திமுக-வின் 'மக்கள் அடைப்பு முகாம்கள்' ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன.
"வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வாக்குக் கொள்ளை நடத்தல்" என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளிக் கொண்டுவந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மேலும், தலைமைச் செயலகத்தையே மூடி வைக்கும் அளவிற்கு சுமார் 30 அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும், ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு இந்த ஜனநாயகப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள்.
ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.
அராஜகங்களும், பாசிச நடைமுறைகளும் என்றென்றும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்காது. விரைவில் வீழும். மக்கள் நலன் காக்கும் ஜனநாயகப் போர்க் களத்தில், தொடர்ந்து உழைப்பைக் கொடுத்து எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கான மனஉறுதியை, மக்களின் வாக்குகள் நமக்கு கொடுத்திருக்கின்றன.
ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது; விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுகவினரின் முகத்திரையைக் கிழித்து, அதிமுகவின் ஆட்சி மீண்டும் மலர்வதற்கு, ஓய்வில்லாமல் தொடர்ந்து களப் பணி ஆற்றிட அனைவரும் வீர சபதம் ஏற்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu