அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அதிமுக தொடர்பான வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஒ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து கடந்த 28 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர். அந்த மனுக்களை நேற்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் அந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீதமுள்ள மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை. அவற்றை சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டபோதிலும் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மீண்டும் தள்ளி வைப்பு:

இந்தநிலையில், ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை மட்டும் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகிய மூவரின் தரப்பில், நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் , அனைத்து மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாக தெரிவித்து, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!