அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
சனாதனம் குறித்து பேசியது, இந்துக்களுக்கு எதிரான பேச்சு குறித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர் குமார், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தி.மு.க. எம்.பி. ஆ. ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, அரசியல்சாசன மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்தான் ஆ. ராசா பேசினாரே தவிர, அரசியல் சாசனத்திற்கு விரோதமாக பேசவில்லை என குறிப்பிட்டார். இந்து முன்னணியை சேர்ந்த ஒரு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் பதிலளிக்கும்போது, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கவேண்டிய ஒரு அமைச்சர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதன் மூலம் பதவிபிரமாணத்தை மீறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்து முன்னணியின் மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வர்ணாசிரமம் பிறப்பில் இல்லை என்றும், சாதி, தீண்டாமை ஆகியவை இருக்கிறது என வைத்துக் கொண்டால் அதற்கு சனாதனத்தை ஒழிக்க வேம்டும் என கூறமுடியாது என்றும், கண்ணில் புரை இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சனாதனம் குறித்து ஒரு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், சனாதனம் நாத்திகத்தையும் பேசுவதாக குறிப்பிட்டார். இந்து முன்னணி ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும், எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான், அவர்கள்தான் தி.மு.க.வை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள் என தெரிவித்தார். இதுபோன்ற அரசியல் மற்றும் கொள்கை பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி, கோவில் சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டதற்காக உள்நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் இந்த வழக்குகளை இந்து முன்னணியினர் தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், இந்து முன்னணியினர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu