ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
X

பைல் படம்.

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி காலை நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.


இதையடுத்து, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் கடந்த 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இரண்டு தரப்பினரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஓபிஎஸ் தரப்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டதோடு, மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்ததோடு, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து, இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், அதிமுக கட்சி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளள வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என வலியுறுத்தி அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லிக்கு சென்று, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா