சீமான் மீதான புகாரை திடீரென வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான புகாரை திடீரென வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி
X

சீமான் மீதான வலக்கை வாபஸ் பெற்றுக்கொண்ட நடிகை விஜயலட்சுமி

வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து திரும்ப பெற்றுக்கொண்டார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் ஆகஸ்ட் 28ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

கருக்கலைப்பு செய்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து சீமானை கடந்த 9-ம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கட்சிப் பணிகள் இருப்பதாக கூறி அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை.

இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.

2-வது முறையாக நேற்று முன்தினம் சீமானின் வீட்டிற்கே சென்று வளசரவாக்கம் காவல்துறையினர் நேரில் சம்மன் வழங்கினர். ஆனால், சீமான் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பதாக சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். இதற்காக நேற்று இரவு 12 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து திரும்ப பெற்றுக்கொண்டார்.


இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை விஜயலட்சுமி கூறுகையில், நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை சிலர் பயன்படுத்திக் கொண்டனர். என்னுடைய புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்.

இவ்விவகாரத்தில் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. நான் பெங்களூருவுக்கே மீண்டும் செல்கிறேன்.

சீமானை எதிர்க்க தமிழ்நாட்டில் ஆள் இல்லை. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சீமான் நன்றாக இருக்கட்டும். எப்போதும் வெற்றியோடு இருக்கட்டும். சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது அது ஒலித்து கொண்டே இருக்கட்டும் என விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!