திருச்சியில் திடீர் என தோன்றினார் நடிகர் அஜீத்-வியப்பில் ரசிகர்கள்

திருச்சியில் திடீர் என தோன்றினார் நடிகர் அஜீத்-வியப்பில் ரசிகர்கள்
X

திருச்சியில் நடந்து வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க வந்தார் நடிகர் அஜீத்குமார்.

திருச்சியில் நடிகர் அஜீத் திடீர் என தோன்றி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சூட்டிங் ரேஞ்சில் திருச்சி ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். திருச்சியில் முதன் முறையாக மாநில அளவில் இந்த போட்டி நடக்கிறது என்பது கூடுதல் தகவலாகும்.

இந்த போட்டிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிரபல நடிகர் அஜீத் குமார் இன்று பங்கேற்றார். சென்னையில் இருந்து யாருக்கும் தெரியாமல் எந்தவித படாடோபமுமின்றி இன்று காலை கார் மூலம் திருச்சிக்கு வந்த அஜீத் சப்தமில்லாமல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்தார்.


இந்த தகவல் எப்படியோ அஜீத் ரசிகர்கள் மத்தியில் மெதுவாக கசிய தொடங்கியது. அஜீத்தை கடவுள் போல் போற்றி புகழும் ரசிகர்கள் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்பார்களே அதே போல் திருச்சிக்கு அவர் வந்திருக்கிறார் என தெரிந்த பின்னரும் சும்மா இருப்பார்களா? அடித்து புரண்டு போட்டி நடைபெறும் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்திற்கு வெளியே வந்து குவிய தொடங்கினர்.

நேரம் ஆக ஆக ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றதால் அஜீத் வெளியே வந்து ஒரு கட்டிடத்தின் மாடியில் ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். தல தல என நேரில் பார்த்த வியப்பில் சத்தம் போட்டனர். பின்னர் அவர் உள்ளே சென்று விட்டார்.

ஆனாலும் கே.கே.நகர் மெயின்ரோட்டில் அஜீத் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. அதிகரித்துக்கொண்டே சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை வரை இந்த நிலை நீடித்தது. அஜீத்தை பார்ப்பதற்காக காத்து கிடந்த ரசிகர்களை போலீசார் அவ்வப்போது விரட்டி அடித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!