பாலியல் வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ். (கோப்பு படம்).
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றில் படித்து வரும் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்தப் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமியை கைது செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் பள்ளிச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இதுபோன்ற குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 5 வயது குழந்தையை அந்தப் பள்ளியின் தாளாளரும், திமுக நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
தெய்வத்தைப் போன்று கொண்டாடப்பட வேண்டிய பிஞ்சுக் குழந்தையை பாலியல் கொடுமை செய்ய அவரது தாத்தா வயதில் உள்ள தாளாளருக்கு எப்படி மனம் வந்தது? அவருடைய பள்ளியில் பயிலும் பிற குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? இத்தகைய மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடத் தகுதியற்றவர்கள்.
குற்றம் சாட்டப்பட்ட பக்கிரிசாமி புகார் கொடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகு தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது போதுமான நடவடிக்கை இல்லை. மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த பக்கிரிசாமியை உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாகவும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu