விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
X
விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனம் ஓட்டுனர்கள் தங்களது நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஓட்டுவது குறித்து போக்குவரத்து அலுவலர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இரு சக்கர வாகன உரிமையாளர்கள் , கடந்த 07.08.2021 ல் மத்திய அரசு திருத்தி அமைக்கப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அரசு வழங்கியுள்ள வாகன எண்களை அதன் தகட்டில் பதிவிடுவதில்லை, விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

மாறாக, நம்பர் பிளேட்டில், தங்களின் அபிமான அரசியல் தலைவர்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவற்றை மிகவும் பெரிதாக பதிவிட்டுக்கொள்கின்றனர் .பெரும்பாலான வாகனங்களில், வாகனத்தின் பதிவு எண்ணுக்குப் பதிலாக, நம்பர் பிளேட்டில் அரசியல் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 50 & 51க்கு எதிரானது. விதிகளை மீறினால் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட் விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட்டில் விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைகளின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும், வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள மண்டல போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும் எனவும், அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் சந்திரசேகர் மனு தாக்கல் செய்த போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை சட்ட விரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லை எனில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.

இதனை படித்து பார்த்து கடும் கோபம் நீதிபதிகள், ஒரு கோரிக்கை வைக்கும்போது இது போன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கண்டனத்தை தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அந்த வரியை நீக்கிவிடலாம் என தெரிவித்தார் . அதற்கு நீதிபதிகள் இதை எளிதாக கடந்து போக முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு இதுபோன்று மனு தாக்கல் செய்யக்கூடாது என எச்சரித்தனர். மனுதாரரும் அதனை பின்பற்றுவதாக கூறினார்.

Tags

Next Story
கார் ஆடியோவுடன் புளூடூத் இணைக்க முடியவில்லையா? இதோ தீர்வுகள்!