ஆர்டர்லி முறையை 4 மாதத்தில் முற்றிலும் ஒழிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்டர்லி முறையை 4 மாதத்தில் முற்றிலும் ஒழிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
X
தமிழகத்தில் ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 19 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது .

ஆனால் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவை இன்றி அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு , நீதிமன்றம் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தது.

இந்நிலையில் ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு அலுவலக உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!