கண்ணீர் சிந்திய படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை பெண் ஊழியர்
நியாயவிலை கடை (கோப்பு படம்).
கடமை பெரிதா? பாசம் பெரிதா என்ற கேள்வி எழுந்த நிலையில் பாசத்தை கண்ணீராக வெளிப்படுத்தி விட்டு கடமையை கண் போல் காப்பாற்றி பணியாற்றி இருக்கிறார் நியாயவிலைக்கடை பெண் ஊழியர்.
இந்த சம்பவம் நடந்த இடம் நெல்லை மாவட்ட பாளையங்கோட்டை. இனி சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போமா?
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். வழக்கமாக ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்,
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டு இருந்தது. முதலில் பொங்கல் பரிசு யாருக்குக் கிடைக்கும்.. யாருக்கு இல்லை என்பதில் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும், பொதுமக்களிடையே இதில் அதிருப்தி எழுந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பொதுமக்களுக்கு முதலில் டோக்கன் வழங்கப்பட்டு அதைத் தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பரிசு தொகுப்பை வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற போதிலும் பொங்கல் பரிசு தொகுப்புப் பணிகளால் இன்று ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நடந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நடந்தது. அப்போது அங்கே பரிசு தொகுப்பை வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவருக்கு போன் வந்துள்ளது. அதை எடுத்துப் பேசிய போது தான் அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த ரேஷன் ஊழியருக்கு வந்தது இரங்கல் செய்தி. தனது சொந்த சகோதரர் இறந்து விட்டார் என்பதே அந்த செய்தி.அதைக் கேட்டதும் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவர் கண்ணீர் சிந்திக்கொண்டு தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளைக் கவனித்தார். கண்களில் கண்ணீர் இருந்தாலும் கூட அதையும் தாண்டி அவர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். கடமைதான் முக்கியம் என்று அவர் இரங்கல் செய்தி வந்த பிறகும் பணியாற்றிய இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பொதுவாக அரசு ஊழியர்கள் என்றாலே முறையாக வேலைக்கு வர மாட்டார்கள், கடைமையைச் செய்யவே லஞ்சம் வாங்குவார்கள் என்ற விமர்சனம் பரவலாக இருக்கிறது. ஆனால், இவரோ தன்னால் வேலையில் எந்த பிரச்சினையும் வரக் கூடாது. மேலும் தனது எடை எல்லைக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும் சோகத்தை கண்ணீராக்கி விட்டு தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார் என அவரை சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu