ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: பங்கேற்காதவர்களுக்கு பணம் வாபஸ்
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் நின்ற ரசிகர் கூட்டம்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. இ-மெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் தெரிவிக்கையில், இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த அசௌகரியங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் காரணம் இல்லை. எனவே அவர் குறித்து தவறாக பதிவிட வேண்டாம். செப்டம்பர் 10ம் தேதி நடந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் நடந்துள்ளது அதை நாங்கள் மறுக்கவில்லை. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது தான், ரஹ்மான் சாரின் பொறுப்பு அதை அவர் சிறப்பாக செய்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர் பணியை சிறப்பாக செய்தார். அவரைத் தாக்கி எந்த பதிவையும் பதிவிட வேண்டாம். கூட்ட நெரிசல், போலி டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் இவ்வளவு குளறுபடிகளுக்கு காரணம். அதற்கு மன்னிப்பு கேட்கிறோம். நிகழ்ச்சிக்கு பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கண்டிப்பாக பணம் திருப்பி அனுப்பப்படும். அதற்கான மெயில் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu