அமலுக்கு வந்தது புதிய மின்கட்டண உயர்வு இனி 'ஷாக்' அடிக்க போகுது 'கரண்ட் பில்'

அமலுக்கு வந்தது புதிய மின்கட்டண உயர்வு  இனி ஷாக் அடிக்க போகுது  கரண்ட் பில்
X

தமிழகத்தில், புதிய மின்கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்தது.

Electricity Tariff - கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

Electricity Tariff -தமிழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும். என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


புதிய மின்கட்டணம் உயர்வு விவரம் வருமாறு:

இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்படும்.

800 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றிற்கு 395 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ. 790 செலுத்த வேண்டும்.

900 யூனிட் வரை மாதம் ஒன்றுக்கு ரூ. 565 செலுத்த வேண்டும்.

மின்கட்டண உயர்வுக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கம் அளித்த போதிலும் மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வீடு மற்றும் குடிசைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழக்கம் போல் தொடரும் என்றும் அதேபோல் விசைத்தறிகளுக்கான 750 யூனிட் மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடரும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வுக்கு மின் வாரியம் காரணம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளதாகவும் மூன்றில் இரண்டு பகுதி நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் இந்த உயர்வுக்கு பின்னரும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது என்று மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக 500 யூனிட் வரை தமிழகத்தில் மின்சாரம் பயன்படுத்துவோர் செலுத்தும் கட்டணம் ரூபாய் 1,725 என்றும், இதே கர்நாடகாவில் 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.3930, கேரளாவில் ரூ.2765, ஆந்திராவில் ரூ.2572, மேற்கு வங்கத்தில் ரூ.3614, மகாராஷ்டிராவில் ரூ.4448, உத்தரப்பிரதேசத்தில் ரூ.2772, குஜராத் மாநிலத்தில் ரூ.2785 செலுத்துவார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்களுக்கான செலவு 161.86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஓய்வூதியர்களுக்கான செலவு 108.47 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மின்சாரத்தை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியாக மட்டும் 212. 85 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் மின் பகிர்மான கழகத்தின் செலவு 175.58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதுவே மின் கட்டணம் உயர்த்துவதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மின் கட்டண உயர்வால் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 92.27 லட்சம் நுகர்வோர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.27.50 மட்டுமே அதிக கட்டணம் என்றும், அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் 36.25 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.72.50 ரூபாய் மட்டுமே அதிக கட்டணம் என்றும் அதேபோல் 500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் 29.381 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.107 முதல் 120 வரை மட்டுமே அதிக கட்டணம் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்

மின்சார பயன்பாடு என்பது அத்யாவசிய தேவைகளில் மிக மிக முக்கியமானது; நுாறு யூனிட் கடந்து மின்சார பயன்பாடு மிக அதிகரித்துள்ள நிலையில், வீடு குடியிருப்புகளில் துவங்கி, சிறுசிறு வியாபார நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரையும் இந்த மின்கட்டண உயர்வு பாதிக்கவே செய்யும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!