நகரங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல உதவும் மொபைல் செயலி

நகரங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல உதவும் மொபைல் செயலி
X
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நகரங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல உதவும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நகரங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல உதவும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும் திறமையாகவும் கொண்டு செல்வதற்கு உதவும் மொபைல் செயலியை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

'ஆப்ட்ரூட்’ (OptRoute) என்றழைக்கப்படும் இந்த மொபைல் செயலியானது, தரகோ, கட்டணமோ இல்லாமல் ஓட்டுநரையும் நுகர்வோரையும் இணைக்கிறது. இடைத்தரகர்கள் யாருமின்றி நுகர்வோரிடமிருந்து பணம் நேரடியாக ஓட்டுநருக்குக் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் என்.எஸ்.நாராயணசுவாமி, ஐஐடி முன்னாள் மாணவர் திரு அனுஜ்ஃபுலியா ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த செயலி சென்னை ஐஐடி யின் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆப்ட்ரூட் லாஜிஸ்டிக்ஸ் மூலம் வணிகமயமாக்கப்பட்டது.

இந்த செயலியின் அடிப்படைக் கருத்துகள் மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் நடைபெற்ற 2020 மரபணு மற்றும் பரிணாமக் கணக்கீடு மாநாட்டில் (https://doi.org/10.1145/3377930.3389804) முன்வைக்கப்பட்டன.

பேக்கிங், வாகன இடத்தை திறமையாகக் கையாளும் முறை போன்ற அம்சங்களையும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. போதிய அளவுக்கு ஆரம்பகட்ட செயல்பாடுகள் நடைபெற்றதும் இவை செயலியில் சேர்க்கப்பட்டுவிடும்.

இந்த செயலி தீர்வுகாணும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் நாராயணசுவாமி, "ஆப்ட்ரூட் செயலி, சரக்கு ஏற்றுதல் மற்றும் போக்குவரத்துக் களத்தில் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையேயான இணைப்பில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.

ஆப்ட்ரூட் லாஜிஸ்டிக்ஸ் இணை நிறுவனரும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவருமான திரு. அனுஜ்ஃபுலியா கூறுகையில், “வாடிக்கையாளர்களையும் ஓட்டுநர்களையும் இணைக்கும் வகையில் எளிமையான மொபைல் செயலியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவைகளையும் ஆப்ட்ரூட் பயன்படுத்தாது. செயல்பாட்டுச் செலவு மிகக் குறைவாக இருப்பதால் தரகுத் தொகை ஏதுமின்றி சேவையை வழங்குகிறோம். இதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள், எங்கள் சேவையை 500-க்கும் அதிகமான நகரங்களில் கிடைக்கச் செய்வோம்" என்றார்.

ஆப்ட்ரூட் செயலியில் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் என்ற இரு பயனர் முறைகள் உள்ளன. எந்த சரக்குப் போக்குவரத்து நிறுவனத்திடம் எந்த வாகனம் தேவை என்பதை பயனர் முறையில் (Customer mode) வாடிக்கையாளர் தெரிவிக்கலாம். தங்களுக்கு வந்துள்ள கோரிக்கைகளை கவனித்து ஓட்டுநர் பயனர் முறையில் (Driver mode) அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் கிடைக்கும் ஆப்ட்ரூட் (OptRoute) செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.

அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், ஐதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், நொய்டா, பஞ்ச்குலா, புனே, மொஹாலி, சூரத், ஜீரக்பூர் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு இந்த செயலி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!