மகளிர் உரிமை தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

மகளிர் உரிமை தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
X
மகளிர் உரிமை தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு வருகிற 25ந்தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றார்.

ஆனால் பதவியேற்று இரண்டு வருட காலம் வரை மகளிர் உரிமை தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை என கூறப்பட்டது .பல்வேறு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் மகளிர் உரிமை தொகை என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பிய பின்னர் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை என பேரிடப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மகளிருக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படவில்லை.

சொந்த வீடு இல்லாதவர்கள், வருமான வரி கட்டும் உறுப்பினர் இல்லாதவர்கள், மின் கட்டணம் வருடத்திற்கு 3200 யூனிட்டுக்கு குறைவானவர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சத்துக்கு மேல் இருந்தது .மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி முதல் மேல்முறையீடு செய்தவர்களுக்கு அவர்கள் மனு ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை விளக்கி குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ஏற்கனவே பயனடைந்து வருபவர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!