பத்திரிகையாளர்களுக்கான சலுகைகள் நாட்டிற்கே வழிகாட்டல்: இந்திய பத்திரிகையாளர் கவுன்சில்

பைல் படம்
புதுடெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகைதந்திருந்த இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) குழுவினர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று திங்கள் கிழமை (22-1-2024) அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பத்திரிகை நிறுவனங்களைச் சார்ந்த ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கலந்துரையாடினர். அப்போது தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் நலன்கள் குறித்து, கேட்டு அறிந்தனர்.
இன்று (23-01-2024) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், இந்திய பத்திரிகை கவுன்சிலின் (Press Council of India) அங்கீகாரத்திற்கான துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வினோத் கோஹ்லி மற்றும் உறுப்பினர்கள் ஜெய் சங்கர் குப்தா, கிங்ஷூக் பிராமணிக், பிரசன்ன குமார் மொஹந்தி, எல்.சி.பார்தியா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் திரு.எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு மூலம் பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்து அறிந்து இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் அமைப்பினர் மிகவும் மகிழ்ந்தனர். அதாவது, தமிழ்நாடு அரசு பத்திரிகையாளருக்கு வழங்கும் ஓய்வூதியத் திட்டம், பத்திரிகையாளருக்கான குடும்ப ஓய்வூதியத் திட்டம், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்ப உதவிநிதித் திட்டம், பத்திரிகையாளர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பத்திரிகையாளர் நலநிதியம் மூலம் அளிக்கப்படும் மருத்துவ உதவிகள், சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய கலைஞர் எழுதுகோல் விருதுத் திட்டம், சிறந்த செய்தி வாசிப்பாளருக்கு வழங்கப்படும் தமிழ் உச்சரிப்பு விருதுத் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் மூலம் பத்திரிகையாளர் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு அரசு ஆற்றி வரும் பணிகள் இந்திய அளவில் வியந்து பாராட்டத் தக்கவையாகும்.
இத்தகைய திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு அரசு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்கிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிந்து மகிழ்கிறோம்; மனதாரப் பாராட்டுகிறோம் என்று இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் அமைப்பினர் பாராட்டியுள்ளனர்.
இந்த ஆலோசனையின்போது, தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறையின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அங்கீகார அட்டை தொடர்பாகவும், மேலும், அரசின் மூலம் பத்திரிகையாளர்களுக்குச் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்தும் ஒளிவிளக்கப்படம் (ppt) மூலம் இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) அமைப்பினருக்கு விளக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu