டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : 84% பேர் எழுதினர்
தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் தேர்வு நடைபெற்றது. குரூப் 4 தேர்விற்கு 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வினை 84 சதவீதம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். அதாவது , 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கட்டாய தமிழ் மொழி தகுதி( 100 கேள்விகள் ), மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு( 75 கேள்விகள் ), திறனறி பகுதி ( 25 கேள்விகள் ) என்று மொத்தம் ( 200 கேள்விகள்) 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்க , தேர்வுக்காக கொடுக்கப்பட்ட 3 மணி நேரம் போதவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். அத்துடன் தமிழக அரசின் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் குழப்பமடைந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான கேள்வி குரூப் 4 தேர்வில் இடம்பெற்றுள்ளது. அதாவது , 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. தமிழக அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வியால் தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu