75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டப் புகைப்படக் கண்காட்சி தஞ்சையில் தொடக்கம்
75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டப் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கே.சரவணக்குமார், தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் சென்ற ஆகஸ்ட் மாதம் 15-08-2021 தேதி தொடங்கி 15-8-2022 வரை நடைபெறவுள்ளது. அதையொட்டி நாடு முழுவதும் 75 வாரங்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை இந்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தஞ்சாவூர் மணி மண்டப வளாகத்தில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டப் புகைப்படக் கண்காட்சியை அமைத்துள்ளது.
இந்தக் கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். முன்னதாக, கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க, அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்வதோடு, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற மத்திய-மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள, `கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி', `கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எவ்வளவு அவசியம்' போன்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை (கைப்பிரதிகளை) பார்வையாளர்களுக்கும், மாணவ-மாணவியருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் விநியோகித்தார்.
தொடர்ந்து 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, "சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, முறையே முதல் பரிசு – ரூ.3000, 2-ஆம் பரிசு – ரூ.2000, 3-ஆம் பரிசு – 1000 என குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் செந்தமிழ், சம்யுக்தா, இலக்கியா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகைக்கான வரைவோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.
இந்தக் கண்காட்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல் போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் கே.ஆனந்த பிரபு கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களின் வரலாற்றையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப்பற்றியும் நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கே.சரவணக்குமார் , தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் எம்.சீராளன், மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சி வரும் 09.09.2021 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இலவசமாக இந்தக் கண்காட்சியைப் பார்வையிடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu