செங்கம் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செங்கம் அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அந்தனூர் புறவழிச்சாலையில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெங்களூர் நோக்கி சென்ற காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், 1 பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில், ஒரு கார் பெங்களுரூவை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், எதிர்புறத்தில் திருவண்ணாமலையை நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு காவல்துறையினருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்டிருப்பதால் அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.. மேலும், விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu